கோர்ட்டில் சாட்சி சொன்ன விவசாயிக்கு கொலை மிரட்டல்
தேனி அருகே இரட்டைக் கொலை வழக்கில் கோர்ட்டில் சாட்சி சொன்ன விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
தேனி அருகே உள்ள சடையால்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 34). கூலித்தொழிலாளி. இவர் தனது தாய், அண்ணன் ஆகிய 2 பேரையும் கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த கொலை வழக்கு தேனி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் எஸ்.வாடிப்பட்டியை சேர்ந்த ராஜூ (48) என்ற விவசாயி சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது கோர்ட்டில் சாட்சி சொன்னார்.
இந்நிலையில், கோர்ட்டில் தனக்கு எதிராக சாட்சி சொல்லி விட்டதாக ராஜூ வீட்டின் முன்பு சென்று ஜெயபால் தகராறு செய்தார். அவரை ஆபாசமாக பேசியதோடு, அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ராஜூ புகார் செய்தார். அதன்பேரில் ஜெயபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.