மனைவியை சரமாரியாக குத்திக்கொன்ற விவசாயி

நெல்லை அருகே குடும்பத்தகராறில் மனைவியை சரமாரியாக குத்திக்கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-17 20:29 GMT

பேட்டை:

நெல்லை அருகே குடும்பத்தகராறில் மனைவியை சரமாரியாக குத்திக்கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி

நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த அத்திமேடு முப்புடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 60). விவசாயியான இவர் நாகர்கோவில் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். இவருடைய மனைவி பேச்சியம்மாள் (52). இவர்களுக்கு இசக்கியம்மாள் என்ற மகளும், சுரேஷ் என்ற மகனும் உள்ளனர்.

இசக்கியம்மாளுக்கு திருமணமாகி அதே ஊரில் கணவருடன் வசித்து வருகிறார். சுரேஷ், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். முருகன் 2 மாதங்களுக்கு ஒரு முறை சொந்த ஊருக்கு சென்று மனைவி, பிள்ளைகளை பார்த்து வந்தார்.

மனைவியிடம் தகராறு

கடந்த 4 மாதங்களாக முருகன் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பேச்சியம்மாள் கணவரிடம் கோபித்து கொண்டு அதே ஊரில் உள்ள மகளின் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் அவர் அங்கிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று முன்தினம் காலையில் பேச்சியம்மாள் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அங்கு வந்த முருகன் மனைவி பேச்சியம்மாளை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.

சரமாரி கத்திக்குத்து

ஆனால் பேச்சியம்மாள் கணவருடன் செல்ல மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முருகன் அங்கிருந்த கத்தியை எடுத்து மனைவி பேச்சியம்மாளை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். பின்னர் முருகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

உடனே அங்கு வந்த மகன் சுரேஷ் மற்றும் அக்கம்பக்கத்தினர் பலத்த காயமடைந்த பேச்சியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பேச்சியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

கணவர் கைது

இதுகுறித்து சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தார்.

நெல்லை அருகே குடும்பத் தகராறில் மனைவியை கணவரே சரமாரியாக குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்