2 குழந்தைகளுடன் மனைவியை கிணற்றில் தள்ளி கொன்ற விவசாயி: தானும் கழுத்தை அறுத்துக்கொண்டார்

2 குழந்தைகளுடன் மனைவியை கிணற்றில் தள்ளி கொன்ற விவசாயி தானும் கழுத்தை அறுத்துக்கொண்டார்.

Update: 2022-08-18 20:54 GMT

மதுரை,

மதுரை மாவட்டம் இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது38). விவசாயி. இவருடைய மனைவி சுரேகா (35). இவர்களுடைய மகள் யோகிதா (16), மகன் மோகனன் (13).

இதில், யோகிதா 11-ம் வகுப்பும், மோகனன் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். தவசிபுதூரில் கொய்யா தோப்பை முருகன் குத்தகைக்கு எடுத்திருந்தார்.

இதனால் அந்த தோப்பில் உள்ள வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

கிணற்றில் தள்ளி கொலை

நேற்று முன்தினம் நள்ளிரவில் தன்னுடைய மனைவி, மகள்-மகனை தோட்டத்தில் உள்ள கிணற்றுப்பகுதிக்கு நைசாக பேசி அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது திடீரென மகள் யோகிதாவையும், மகன் மோகனனையும் முருகன் கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். இதைப்பார்த்ததும் சுரேகா அலறினார்.

தண்ணீரில் இரு பிள்ளைகளும் தத்தளிப்பதை கண்டு அவர்களை காப்பாற்ற முயன்றார். அந்த நேரத்தில் மனைவியை தாக்கி, அவரது, கைகளை கட்டி கிணற்றில் தூக்கி போட்டதாக கூறப்படுகிறது. சற்று நேரத்தில் 3 பேரும் கிணற்றில் மூழ்கி ஒருவர்பின் ஒருவராக உயிரிழந்தனர்.

கழுத்தை அறுத்துக்கொண்டார்

உடனே, முருகன் தனது கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதற்கு முன்பு, உறவினர் ஒருவரிடம் கடைசியாக போனில் பேசி, "கிணற்றில் குதித்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறோம்" என கூறிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்திருக்கிறார். எனவே எதிர்முனையில் பேசிய நபர் அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது, கிணற்றின் அருகே முருகன், கழுத்தில் ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் இருந்து 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. என்ன காரணத்துக்காக முருகன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை.

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்