ஆதரவற்ற மாணவர்களுக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களை இலவசமாக வழங்கிய விவசாயி

ஆதரவற்ற மாணவர்களுக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களை இலவசமாக வழங்கிய விவசாயி

Update: 2022-12-27 20:17 GMT

தஞ்சையில் நடைபெறும் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் ஆதரவற்ற மாணவர்களுக்கு வழங்குவதற்காக 10 ஆயிரம் வாழைப்பழங்களை விவசாயி இலவசமாக வழங்கினார்.

விளையாட்டு போட்டி

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இன்று (புதன்கிழமை), மற்றும் நாளை (வியாழக்கிழமை) தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சமூகபாதுகாப்புத்துறை சார்பில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவசமாக வாழைப்பழங்களை தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த வடுகக்குடியைச் சேர்ந்த வாழை விவசாயி மதியழகன் வழங்கினார்.

10 ஆயிரம் வாழைப்பழங்கள்

அவர் 1½ டன் எடையுள்ள 10 ஆயிரம் வழைப்பழங்களை எடுத்து வந்து, மாணவர்களுக்கு வழங்குவதற்காக தஞ்சை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அலுவலர் குளோரி குணசீலியிடம் வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை, நாளை தீர்க்க சுமங்கலி திருமண மகாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்குகிறார்.

இதுகுறித்து விவசாயி மதியழகன் கூறுகையில், "நான் வாழை சாகுபடி செய்து வருகிறேன். கொரோனா காலத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு நான்கு முறை இலவசமாக வாழைப்பழங்களை வழங்கியுள்ளேன். அதே போல் கடுவெளியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகை காலத்தில் இலவசமாக வாழைப்பழங்களை வழங்கி வருகிறேன்.

ரூ.40 ஆயிரம்

தற்போது ஆதரவற்ற மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வாழைப்பழங்களை வழங்க முடிவு செய்தேன். இதற்காக 1½ டன் எடையில் ரூ.40 ஆயிரம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட பூவன் ரக வாழைப்பழங்களை வழங்கியுள்ளேன்"என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்