ஒட்டன்சத்திரம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலி; உடலை எடுக்கவிடாமல் கிராம மக்கள் போராட்டம்
ஒட்டன்சத்திரம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார். அவரது உடலை எடுக்கவிடாமல் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
ஒட்டன்சத்திரம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார். அவரது உடலை எடுக்கவிடாமல் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
மக்காச்சோளத்துக்கு காவல்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தா.புதுக்கோட்டையை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 47). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. இந்த தோட்டத்தில் சவுந்தரராஜன் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார்.
தற்போது விளைச்சல் அடைந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்து அவற்றை தோட்டத்தில் உள்ள களத்தில் சேமித்து வைத்திருந்தார். இதையொட்டி தோட்டத்தில் கடந்த சில நாட்களாக அவர் இரவில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
காட்டு யானையை விரட்ட...
அதன்படி, நேற்று முன்தினம் இரவும் அவர் தனது தோட்டத்தில் காவல் பணியில் ஈடுபட்டார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் அவரது தோட்ட பகுதியில் திடீரென்று யானை பிளிரும் சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர் என்னவென்று பார்த்தார்.
அப்போது காட்டு யானை ஒன்று தோட்டத்தில் சேமித்து வைத்திருந்த மக்காச்சோளத்தை தின்று கொண்டிருந்தது. இதனால் அவர், சத்தமிட்டு அந்த யானையை விரட்ட முயன்றார்.
விவசாயி பலி
அப்போது அந்த யானை சவுந்தரராஜனை நோக்கி ஓடி வந்தது. இதையடுத்து யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர் ஓட்டம் பிடித்தார். இருப்பினும் விடாமல் துரத்திய காட்டு யானை, சவுந்தரராஜனை தந்தத்தால் குத்தி தூக்கி வீசியது. இதில் சவுந்தரராஜன் குடல்சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதன்பிறகு காட்டு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
இதற்கிடையே சவுந்தரராஜன் இறந்து கிடப்பதை, அந்த வழியாக சென்ற விவசாயிகள் பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் மற்றும் ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதேபோல் கிராம மக்கள் மற்றும் சவுந்தரராஜனின் குடும்பத்தினர், உறவினர்களும் அங்கு குவிந்தனர்.
கிராம மக்கள் போராட்டம்
இந்தநிலையில் பிரேத பரிசோதனைக்காக சவுந்தராஜனின் உடலை எடுக்க போலீசார் முயன்றனர். இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள், சவுந்தரராஜனின் உடலை எடுக்க விடாமல் தடுத்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், சத்திரப்பட்டி அருகே மலையடிவார கிராம பகுதியில் 'குட்டைக்கொம்பன்' என்ற ஒற்றை காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. அந்த யானை தாக்கியதில் தான் சவுந்தரராஜன் உயிரிழந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்டபாணி என்ற விவசாயியையும் இந்த யானை தாக்கி கொன்றுள்ளது. எனவே விவசாயிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள 'குட்டைக்கொம்பன்' காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அதனை வேறு வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர்.
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், மாவட்ட வன அலுவலர் பிரபு மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து கிராம மக்கள், தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் சவுந்தரராஜனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த சவுந்தரராஜனுக்கு சுந்தரி (42) என்ற மனைவியும், சுகந்தி (23) என்ற மகளும், கணேசமூர்த்தி (19) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.