போலீஸ் நிலையம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயற்சி
நெய்க்காரப்பட்டியில், போலீஸ் நிலையம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றார்.
நெய்க்காரப்பட்டி கே.வேலூரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 64). விவசாயி. நேற்று இவர், பழனி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் போலீஸ் நிலையம் முன்பு நின்று, பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்த போலீசார் உடனடியாக வந்து, அவரிடம் இருந்த கேனை பிடுங்கினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நிலப்பட்டா தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.