ஆத்தூர்:-
ஆத்தூர் அருகே கிணற்றில் விழுந்த பசு மாட்டை மீட்க முயன்றபோது தலையில் கல் விழுந்து விவசாயி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிணற்றுக்குள் பசு விழுந்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூர் ஊராட்சி வன்னியபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 40), விவசாயி. இவரது விவசாய நிலத்தின் அருகே கிணறு ஒன்று உள்ளது.
நேற்று முன்தினம் மாலை விவசாய நிலம் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது. அந்த கிணற்றில் இறங்கி ஏற படிக்கட்டு வசதி இல்லை.
இதனால் பசுவை மீட்க விவசாயி மணி மற்றும் அங்கிருந்த 3 பேர் முடிவு செய்து கிணற்றின் மேற்பகுதியில் உள்ள கல் ஒன்றில் கயிறு கட்டி அதனை பிடித்து கொண்டு உள்ளே இறங்கினர்.
கல் விழுந்தது
இதையடுத்து பசு மாட்டை சுற்றி கயிறு கட்டி அதனை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பசு பயத்தில் திமிறியது. இதனால் கிணற்றின் மேல் கயிறு கட்டியிருந்த பகுதியில் இருந்த கற்கள் கிணற்றுக்குள் விழ தொடங்கின.
அப்போது பெரிய கல் ஒன்று விவசாயி மணி தலையில் விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயக்கம் அடைந்து கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்க தொடங்கினார். மற்ற 3 பேரும் பத்திரமாக மேலே ஏறி வந்தனர். பசு மாடும் உயிருடன் மீட்கப்பட்டது.
உடல் மீட்பு
பின்னர் மணியுடன் வந்தவர்கள் கிணற்றுக்குள் இறங்க முடியாததால் சம்பவம் குறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர்.
இந்த நிலையில் நேற்று காலையில் கிணற்றுக்குள் கிடந்த மணியின் உடலை தீயணைப்பு வீரர்கள் கைப்பற்றி மேலே கொண்டு வந்தனர். பின்னர் ஆத்தூர் ரூரல் போலீசார் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மணிக்கு, ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பசுவை மீட்க கிணற்றில் இறங்கிய போது கல் விழுந்து விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்ைத ஏற்படுத்தி உள்ளது.