4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை

4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-14 18:17 GMT

வேப்பந்தட்டை:

குடும்ப தகராறு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெண்பாவூர் காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 35). விவசாயி. இவரது மனைவி பூங்கொடி (30). இவர்களுக்கு யோகேஸ்வரன் (9), பிரகதீஸ்வரன் (4) என 2 மகன்கள் உண்டு.

இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மகனுடன் கிணற்றில் குதித்தார்

இதில் மனமுடைந்த பாஸ்கர், தனது 2-வது மகன் பிரகதீஸ்வரனை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த விவசாயக் கிணற்றுக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அவர், பிரகதீஸ்வரனுடன் கிணற்றில் குதித்துள்ளார். இதில் 2 பேரும் நீரில் மூழ்கினர்.

இதனைக்கண்ட பூங்கொடி, சத்தம்போட்டு அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார். இதையடுத்து அவர்கள், கிணற்றுக்குள் இருந்து 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

பிணங்களாக மீட்பு

இதையடுத்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், கயிற்றை கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கி தேடினர். இதையடுத்து பாஸ்கர் மற்றும் பிரகதீஸ்வரன் ஆகியோரை பிணமாக மீட்டு கிணற்றில் இருந்து மேலே கொண்டு வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சினையால் மகனுடன் தந்தை கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் வெண்பாவூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்