சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு
மூங்கில்துறைப்பட்டு அருகே சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே வடபொன்பரப்பி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பாக்கம் ஏரி கரை அருகே இருந்த புளிய மரம் ஒன்று வேறோடு சாலையில் சாய்ந்து விழுந்தது. இதனால் கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சாலையின் இருபுரமும் நீண்ட தொலைவில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போக்குவரத்தை சரி செய்தனர். இருப்பினும் அப்பகுதியில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.