சேலம் அருகே பரிகாரம் செய்வதாக கூறி தம்பதியிடம் நகை அபேஸ் செய்த போலி சாமியார் மகனுடன் கைது

சேலம் அருகே பரிகாரம் செய்வதாக கூறி தம்பதியிடம் நகை அபேஸ் செய்த போலி சாமியார் மற்றும் அவருடைய மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-23 20:57 GMT

கொண்டலாம்பட்டி:

பரிகார பூஜை

சேலம் கொண்டலாம்பட்டி அருகே தம்மநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி தனம் (வயது 35), கூலித்தொழிலாளர்கள். கடந்த மாதம் 31-ந் தேதி இவர்களது வீட்டுக்கு சாமியார் வேடம் அணிந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அவர் உங்களுக்கு நேரம் சரியில்லை என்றும், கஷ்டங்கள் நீங்குவதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறினார். இதை நம்பிய தம்பதி பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்தனர்.

பின்னர் பூஜையின்போது அந்த நபர் தனது உள்ளங்கையில் எண்ணெயை ஊற்றினார். அப்போது ஏதாவது நகைகள் இருந்தால் வையுங்கள் என்றும், பின்னர் அந்த நகையை அணிந்து கொண்டால் கஷ்டங்கள் நீங்கிவிடும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து தனம் தனது காதில் அணிந்திருந்த ½ பவுன் கம்மலை கழற்றி உள்ளங்கையில் இருந்த எண்ணெயில் வைத்தார். பின்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று பூஜை செய்ய வேண்டும் என்று கூறி பன்னீர்செல்வத்தை தனது மோட்டார் சைக்கிளில் அந்த நபர் அழைத்து சென்றார்.

போலீசார் விசாரணை

அங்கு அவரிடம் பூஜை செய்துவிட்டு வருமாறு கூறி அனுப்பி வைத்தார். ஆனால் சாமியார் வேடமணிந்த நபர் கோவிலுக்குள் செல்லாமல் வெளியே நின்றார். பன்னீர்செல்வம் கோவிலுக்குள் நுழைந்ததும் மர்ம நபர் அங்கிருந்து நகையுடன் தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து பன்னீர்செல்வம் வெளியே வந்தபோது அந்த நபர் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் குடுகுடுப்பைகாரன் வேடமிட்ட 2 பேர் வந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணையில் அந்த நபர்கள் திருப்பூரை சேர்ந்த செல்வம் (வயது 45), அவருடைய மகன் சிவகாசி (18) என்பதும், பன்னீர்செல்வத்திடம் பரிகாரம் செய்வதாக கூறி நகையை அபேஸ் செய்த போலி சாமியார்கள் என்பதும் தெரியவந்தது.

தந்தை, மகன் கைது

இதையடுத்து அவர்களை தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் விருத்தாசலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று செல்வம், அவருடைய மகன் சிவகாசியை கைது செய்து சேலத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்