மருந்து கடையில் மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது

திருப்பத்தூர் டவுன் பகுதியில் மருந்து கடையில் மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். மருந்து கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.

Update: 2023-02-25 17:44 GMT

திருப்பத்தூர் டவுன் பகுதியில் மருந்து கடையில் மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். மருந்து கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.

மருந்து கடை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தருமன் என்பவரின் மகன் சுப்பிரமணி என்ற மணி (வயது 49). இவர் கச்சேரி தெரு பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார் .

இவர் மருத்துவ படிப்பு படிக்காமலேயே அவருடைய மருந்து கடையில் குழந்தை இல்லாத பெண்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். மேலும் எம்.பி.பி.எஸ். டாக்டர்கள் கொடுக்காத அதிக வீரியம் வாய்ந்த மருந்துகளையும் கொடுத்து வந்ததாக பல்வேறு புகார்கள் வந்தது.

இதையடுத்து மருத்துவம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து மற்றும் மாவட்ட மருந்து ஆய்வாளர் சபரிநாதன், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுனர் அருள் ஆகியோர் மருந்து கடைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

போலி டாக்டர் கைது

அப்போது சுப்பிரமணி வீரியம் மிகுந்த மருந்துகள் உபயோகிப்பதும் மேலும் நோயாளிகளுக்கு மருத்துவம் அளிப்பதையும் உறுதி செய்தனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசில் இணை இயக்குனர் மாரிமுத்து புகார் அளித்தார். அதன்பேரில் சுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கர்ப்பிணிகளுக்கு கொடுத்த மாத்திரை, மருந்துகளை கைப்பற்றினர்.

அனுமதி பெறாமல் மருந்துகள் வினியோகம் செய்த மருந்து கடைக்கு திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்