பலாப்பழத்துக்கு மதிப்பு கூட்டும் தொழிற்சாலை தொடங்க வேண்டும்

வடகாடு பகுதியில் பலாபழத்துக்கு மதிப்பு கூட்டும் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-05 18:15 GMT

வடகாடு:

பலா மரங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, மாங்காடு, அனவயல், கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, கீரமங்கலம், மேற்பனைக்காடு, பனங்குளம், குளமங்கலம், சேந்தன்குடி, மறமடக்கி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பலா மரங்களை வைத்து பராமரித்து வருகின்றனர். இதன் மூலமாக ஓரளவுக்கு கணிசமான வருமானம் ஈட்ட முடியும் என்று நம்பியிருந்த நிலையில் 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் சிக்கி பலா மரங்கள் உள்ளிட்ட எண்ணற்ற மரங்கள் இருந்த இடம் தெரியாமல் போயின. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னையை தவிர வேறு எந்த வித மரங்களுக்கும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்று இப்பகுதி விவசாயிகள் வருத்தப்பட்டு வருகின்றனர்.

தொழில்கள் முடங்கின

இதையடுத்து அதிலிருந்து மெல்ல மெல்ல விவசாயிகள் மீண்டெழுந்து வந்தனர். இதைத்தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பலா உற்பத்தி மட்டுமின்றி விவசாயம் சார்ந்த தொழில்கள் அனைத்தும் முடங்கி போய் விட்டது.

இப்பகுதிகளில் கஜா புயல் மற்றும் கொரோனா பெருந்தொற்று போன்ற பல இன்னல்களை கடந்து வந்த விவசாயிகள் இன்னமும் பலா, தென்னை, மா உள்ளிட்ட மரக்கன்றுகளை நடவு செய்து வளர்ந்து வருகின்றனர். பலாப்பழ உற்பத்தியும் தற்சமயம் ஓரளவுக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. உற்பத்தி ஆகக்கூடிய பலாப்பழங்கள் அதிக அளவில் தித்திப்பான சுவையுடன் இருப்பதால் உள்ளூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வளைகுடா நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கோரிக்கை

ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை பலாப்பழம் உற்பத்தி மற்றும் விற்பனை மும்முரமாக நடைபெறுவது வழக்கம். நாள் ஒன்றுக்கு சுமார் 50 டன் வரை உற்பத்தி இருந்தும், விவசாயிகள் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் இல்லாததால் இப்பகுதி விவசாயிகளில் பலர் பலாப்பழங்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டு விடுவதால் பலா மரங்களிலேயே பறவைகளுக்கு உணவாகி வருகிறது. சில நேரங்களில் பழங்கள் மரத்திலேயே பழுத்து அழுகியும், வீணாகி வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர்.

இப்படி ஆண்டு தோறும் வீணாகி வரும் பலா உற்பத்தியால் கணிசமான வருமானத்தை இழந்து வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில் மதிப்பு கூட்டும் தொழிற்சாலையை அரசு தொடங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளை பொருட்கள் வீணாகிறது

வடகாடு பகுதியை சேர்ந்த விவசாயி திருப்பதி கூறுகையில், வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் உரிய விலையில்லாமல் அழுகி வீணாகும் பலா, வாழை உள்ளிட்ட விவசாய விளை பொருட்கள் வீணாவதை தடுக்கும் பொருட்டு மதிப்பு கூட்டும் தொழிற்சாலை அமைத்து கொடுத்தால் தங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று கூறினார்.

குளிர்பதன கிடங்கு அமைக்க இடம் தேர்வு

அனவயல் பகுதியை சேர்ந்த விவசாயி ரவி கூறுகையில், விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் இதுவரை எந்தவித திட்டங்களும் அரசு மூலமாக அறிவிக்கப்படவில்லை என்பது வேதனையை தருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் குளிர்பதன கிடங்கு அமைக்க இடம் கூட தேர்வு செய்யப்பட்டது. அந்த திட்டமும் காலப்போக்கில் என்ன ஆனது என்று கூட தெரியாமல் போயின. இப்பகுதி விவசாயிகள் ஆண்டு தோறும் அரசுக்கு கோரிக்கை மட்டுமே விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் யாரும் அரசின் கவனத்திற்கு கூட கொண்டு சேர்ப்பது கிடையாது என்றும் வேதனையுடன் கூறினார்.

விவசாயிகள் வாழ்வாதாரம்

வடகாடு பகுதியை சேர்ந்த பிரபாகர் கூறுகையில், ஆலங்குடி தொகுதியில் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நறுமண தொழிற்சாலை மற்றும் குளிர்பதன கிடங்கு, கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம், மதிப்பு கூட்டும் தொழிற்சாலை போன்றவை அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு உரிய முறையில் பரிசீலனை செய்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைத்து கொடுத்தால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்