சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய தூசி பழைய காவல் நிலையம்

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய தூசி பழைய காவல் நிலையத்தை இடித்துவிட்டு வேறு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்துள்ளனர்.

Update: 2023-02-08 17:15 GMT

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய தூசி பழைய காவல் நிலையத்தை இடித்துவிட்டு வேறு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்துள்ளனர்.

நூற்றாண்டை கடந்த கட்டிடம்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவிற்கு உட்பட்டது தூசி. இது, காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் உள்ளது. இங்கு கடந்த 1904-ம் ஆண்டு தூசி காவல் நிலையம் தொடங்கப்பட்டது.தூசி, மாமண்டூர், மாத்தூர், சித்தாத்தூர், மாங்கால், சோழவரம், அப்துல்லாபுரம், பல்லாவரம் உள்ளிட்ட 44 கிராமங்கள் தூசி காவல் நிலையத்திற்கு உட்பட்டது.

 



தொடக்கத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு தலைமை காவலர், 4 காவலர் என 6 பேர் பணியாற்றினர். இந்த காவல் நிலைய கட்டிடத்தின் பின்புறத்தில் தூசி சார் பதிவாளர் அலுவலகமும் செயல்பட்டது. இந்தநிலையில் கடந்த 2004-ம் ஆண்டு இந்த காவல் நிலையத்தின் கட்டிடம் நூற்றாண்டை கடந்ததால் கட்டிடம் முழுவதும் சிதிலமடைய தொடங்கியது. அதைத்தொடர்ந்து தூசி காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

புதிய கட்டிடம்

இதனையடுத்து காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தூசி அம்மன் கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டிடம் கட்டப்பட்டது.இதே போல் தூசி மெயின் ரோடு காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தொடர்ந்து இரு அலுவலகங்களும் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன.

இந்த இரண்டு அலுவலகங்களும் செயல்பட்டு வந்த பழைய கட்டிடம் கேட்பாரற்ற நிலையில் பாழடைந்து உள்ளதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்து வருகிறது. மேலும் பகல் நேரங்களில் மதுபிரியர்கள் அட்டகாசத்தால் பொதுமக்களின் முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது.

எனவே, பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கட்டிடங்களை இடித்துவிட்டு இந்த இடத்தை வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்