குடிநீர் கிணற்றை தூர்வார வேண்டும்
அய்யன்கொல்லி அருகே குடிநீர் கிணற்றை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே குதிரைவட்டம், செம்பவரா காலனியில் ஆதிவாசி மக்கள், பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்காக குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு, குடிநீர் கிணறு, பம்ப் அறை அமைக்கப்பட்டது. அந்த கிணற்றில் இருந்து குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே குடிநீர் கிணறு கடந்த பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் தண்ணீர் பாசி படிந்தும், சேறு போல் மோசமாக காணப்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குடிநீரை குடித்து வரும் பொதுமக்கள், ஆதிவாசி மக்கள், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குடிநீர் கிணற்றை சீரமைத்து தூர்வார வேண்டும். மேலும் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.