போலீசாரின் குடும்பத்தினருடன் கலந்்துரையாடல்
வால்பாறையில் போலீசாரின் குடும்பத்தினருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
வால்பாறை
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் வால்பாறை உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாரின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வால்பாறை, காடம்பாறை, முடீஸ், சேக்கல்முடி ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதற்கு வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீசாரின் குடும்பத்தினர், எங்களுடன் இருந்து எங்கள் கணவர், மனைவியர் பணிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பம் மனைவி, குழந்தைகள் ஒரு பக்கமும் கணவர் மனைவியர் வேறு பக்கமும் இருந்து பணிபுரிவதால் பல்வேறு மன உழைச்சலுக்கு குடும்பத்தினர் ஆளாகி வருகிறோம். தாய், தந்தையை பார்க்க முடியாமல் குழந்தைகள் பாசப்பிணைப்பு இல்லாமல் போய்விடுகின்றனர். வயதான பெற்றோர் தங்களது பிள்ளைகளை பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. போலீசாருக்கு குடியிருப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். போலீஸ் நிலையங்களுக்கு ரோந்து பணியில் ஈடுபடுவதற்கு வாகன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
தொடர்ந்து துணை சூப்பிரண்டு சீனிவாசன் பேசுகையில், போலீசாரின் குடும்பத்தினர் தைரியத்துடன் அனைத்து சூழ்நிலைகளையும் எதிர் கொண்டு வாழ பழகிக்கொள்ள வேண்டும். உங்களது கோரிக்கைகளை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதில், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, சப்-இன்ஸ்பெக்டர்கள் உதயசூரியன், தங்கராஜ், சவுரிராஜன், கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.