திருச்சியில் மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-09-11 19:34 GMT

திருச்சியில் மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

திருச்சி வடக்கு காட்டூரை சேர்ந்தவர் டேவிட்ரீகன் (வயது 38). பெயிண்டிங் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 4 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை டேவிட் ரீகன் கருமண்டபம் நியூஆல்பாநகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது கட்டிடத்தின் அருகே சென்ற மின்கம்பி அவர் மீது உரசியதாக கூறப்படுகிறது.

இதில் டேவிட் ரீகன் மீது மின்சாரம் பாய்ந்தது. படுகாயம் அடைந்த அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் நேற்று காலை அரசு மருத்துவமனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் டேவிட் ரீகனின் உறவினர்கள் திரண்டனர். அப்போது அவர்கள், உயிரிழந்த டேவிட் ரீகனின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

ஆபத்தான மின்கம்பி செல்லும் பாதைக்கு அருகே கட்டிடம் கட்ட அனுமதி வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மின் இணைப்பு வழங்கிய மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

பேச்சுவார்த்தை

பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகளுடன் தாசில்தார் ராஜவேலு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் இன்றும் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டகாரர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் கணேசன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

முற்றுகையிட முயற்சி

இதேபோல் கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பனையபுரம் பொன்னி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மகேஸ்வரி (40). இவர் வயிற்று வலி காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 4-ந்தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகள் செய்து கர்ப்பப்பையை அறுவை சிசிச்சை மூலம் அகற்றினர். இதில், 10-ந்தேதி இரவு அவர் உயிரிழந்தார். இந்நிலையில் மகேஸ்வரிக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையை நேற்று முன்தினம் முற்றுகையிட முயன்றனர். தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்