பல்லடம்
பல்லடம் மற்றும் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காயத்திற்கு அடுத்தபடியாக தக்காளி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது சில பகுதிகளில் தக்காளியில் வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வாடல் நோயை கட்டுப்படுத்துவது குறித்து, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பல்லடம் பகுதியில் தக்காளி பயிரிட்ட ஒரு சில தோட்டங்களில் வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. நோய் ஏற்பட்ட செடிகளில் தண்டு, இலைகள், மற்றும் பழங்களில் கோடுகள் ஏற்பட்டு இருக்கும். இலைகளில் கருப்பு வட்ட புள்ளிகள் தோன்றி, அந்த இலைகள் அடர் பழுப்பு நிறமாக மாறும். பழங்களில் வட்ட வட்ட புள்ளிகள் ஏற்படும். பழுத்த பழங்களின் கழுத்துப்பகுதி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாக மாறிவிடும். செடியில் உள்ள பேன் மூலம் வாடல் நோய்க்கான வைரஸ் பரவுகின்றது. நோயை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட தக்காளி செடிகளை பிடுங்கி அழித்து விட வேண்டும். தக்காளி விதைப்பதற்கு முன் நிலத்தை சுற்றி மக்காச்சோளம், கம்பு ஆகிய பயிர்களை நடவு செய்யலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
----