கழுத்தில் வயர்கள் சுற்றப்பட்டு பிணமாக கிடந்த மெக்கானிக்

வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே கழுத்தில் வயர்கள் சுற்றப்பட்டு மெக்கானிக் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-16 18:02 GMT

பிணமாக கிடந்த மெக்கானிக்

வேலூர் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 24), மெக்கானிக். இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாய், தந்தையை இழந்த சஞ்சய் அவருடைய அக்கா வீட்டில் தங்கி சேண்பாக்கத்தில் இருந்து புதிய பஸ்நிலையம் வரும் சர்வீஸ் சாலையில் உள்ள லாரி ஷெட் ஒன்றில் வேலை செய்து வந்தார். அக்காவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கடந்த சில மாதங்களாக லாரி ஷெட்டிலேயே இரவு தங்கி வேலை செய்துள்ளார்.

இந்த நிலையில் லாரி ஷெட் அருகே கழுத்தில் வயர்கள் சுற்றப்பட்ட நிலையில் சஞ்சய் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சென்று உடலை பார்வையிட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவலறிந்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சஞ்சய் உடன் பணிபுரிந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சஞ்சய் கழுத்தில் வயர்களை சுற்றிக்கொண்டு லாரி ஷெட்டில் உள்ள கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

கொலையா?

அவரின் எடை தாங்காமல் வயர் அறுந்து உடல் கீழே விழுந்துள்ளது. சஞ்சயின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே முழுமையான விவரம் தெரிய வரும்.

முன்விரோத தகராறு அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் சஞ்சய் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்