தோட்டத்தில் இறந்து கிடந்த பெண் யானை
அழகியபாண்டியபுரம் அருகே தனியார் தோட்டத்தில் ஒரு பெண் யானை இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அழகியபாண்டியபுரம்:
அழகியபாண்டியபுரம் அருகே தனியார் தோட்டத்தில் ஒரு பெண் யானை இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் யானை
குமரி மாவட்ட வன பகுதிகளில் ஏராளமான யானைகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. இதுபோக தேனி மற்றும் கம்பம் பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானையும் முத்துக்குழிவயல் பகுதியில் விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அழகியபாண்டியபுரம் வனச்சரகம் இஞ்சிக்கடவு பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு யானை இறந்து கிடந்தது. இதை பாா்த்த தோட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது இறந்து கிடந்தது பெண் யானை என்பதும், அதற்கு 40 வயது இருக்கும் என்பதும் தெரியவந்தது.
பிரேத பரிசோதனை
தொடர்ந்து யானையின் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த யானை ஒரு மேடான பகுதியில் இருந்து இறங்கியபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் யானை இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிைலயில் யானையின் உடலை பிரேத பரிசோதனை ெசய்ய மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அதன்படி நேற்று மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர், தடிகாரன்கோணம் கால்நடை மருத்துவர் மற்றும் வன பணியாளர்கள் முன்னிலையில் சம்பவ இடத்திலேயே யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் அதை தனியார் தோட்டத்தின் அருகே புதைத்தனர். குமரியில் யானை இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.