ஈரோட்டில் சாக்குமூட்டையுடன் சாக்கடையில் கிடந்த பிணம் 3 வாரங்களுக்கு பிறகு கொலை செய்யப்பட்டவர் அடையாளம் தெரிந்தது

கொலை செய்யப்பட்டவர் அடையாளம் தெரிந்தது

Update: 2022-09-20 20:07 GMT

ஈரோட்டில் பிணத்தை மூட்டையாக கட்டி சாக்கடையில் வீசப்பட்ட சம்பவத்தில் 3 வாரங்களுக்கு பிறகு கொலை செய்யப்பட்டவர் தேனியை சேர்ந்தவர் என தெரியவந்தது.

கொலை

ஈரோடு மோளகவுண்டன்பாளையம் ஜீவானந்தம்வீதியில் செல்லும் சாக்கடையில் கடந்த மாதம் 30-ந் தேதி இரவு அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபரை கொலை செய்து பிணத்தை சாக்கு, போர்வையால் சுற்றி கட்டிவிட்டு வீசி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்டவர் யார்? கொலை செய்தவர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் கொலை செய்யப்பட்டவரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காணுவதில் போலீசாருக்கு சவாலாக இருந்து வந்தது. பிணம் கிடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அடையாளம் தெரிந்தது

இந்தநிலையில் 3 வாரங்களுக்கு பிறகு இறந்தவரின் அடையாளம் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதன்விவரம் வருமாறு:-

தேனி மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் (வயது 32) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவர் ஒப்பந்ததாரர் ஒருவர் மூலமாக ஈரோட்டுக்கு அழைத்து வரப்பட்டார். ஈரோடு மோளகவுண்டன்பாளையத்தில் பழனிசாமி என்பருடைய வீட்டில் கட்டிட வேலை செய்து வந்தார். அங்கு கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த சேட்டான் (29) என்ற வாலிபரும் வேலை செய்தார். இதனால் 2 பேரும் நண்பர்களாக பழகி உள்ளனர்.

சம்பவத்தன்று அவர்கள் 2 பேரும் மது அருந்திக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சேட்டான், சுதாகரை கொலை செய்துவிட்டு, பிணத்தை மூட்டையாக கட்டி வீசி சென்ற பரபரப்பு தகவல் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

போலீஸ் காவல்

கொலையாளியான சேட்டானை பிடிக்க ஈரோடு போலீசார் கேரள மாநிலத்துக்கு விரைந்தனர். அங்கு சென்று நடத்திய விசாரணையில், சேட்டான் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் கேரள மாநில போலீஸ் நிலையங்களில் இருப்பது தெரியவந்தது. மேலும், ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். எனவே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த ஈரோடு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

இந்த விசாரணைக்கு பிறகு, சுதாகர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம்? அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? உள்பட பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்