சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் சாலையில் அபாய பள்ளம்
தாராசுரம் மார்க்கெட் அருகே சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் சாலையில் அபாய பள்ளமாக உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாராசுரம் மார்க்கெட் அருகே சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் சாலையில் அபாய பள்ளமாக உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காய்கறி மார்க்கெட்
கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியில் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான காய்கறி வியாபாரிகள் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரத்தில் காய்கறிகளை வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த காய்கறி மார்க்கெட்டில் கும்பகோணம் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான காய்கறி வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாங்கி சென்று தங்கள் பகுதியில் விற்பனைசெய்து வருகின்றனர்.
தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மொத்தமாக காய்கறிகளை வாங்கி தங்களது பகுதிக்கு எடுத்து செல்ல சிறிய ரக சரக்கு வாகனங்களை வாடகைக்கு எடுத்து வருவது வழக்கம். அதே போல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் உருளைக்கிழங்கு, பல்லாரி, வாழை உள்ளிட்ட காய்கறிகளை ஏற்றிக்கொண்டு மார்க்கெட்டின் அருகே உள்ள சாலை மூலம் மார்க்கெட் பின்புறம் கொண்டு செல்லப்படுவதற்காக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அபாய பள்ளம்
இந்த சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழாயின் ஆள்நுழைவு தொட்டியின் மூடியானது சேதமடைந்து உள்ளது. இதனால் சாலையின் நடுவே அபாய பள்ளம் போல் காட்சி அளிக்கிறது. பாதாள சாக்கடையின் மூடி உடைந்து பலநாட்கள் ஆகிறது. இதனால் அந்த வழியாக வருபவர்கள் பள்ளங்களில் சிக்கி வருகின்றனர்.
இந்த பள்ளங்களால் விபத்து ஏற்படாமல் இருக்க அந்த பகுதியை சோ்ந்தவர்கள் சாக்கடையின் அருகே பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அடையாளத்திற்காக வைத்துள்ளனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் இந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மார்க்கெட் அருகே சாலையில் உள்ள பாதாளசாக்கடை மூடியை சரிசெய்து அபாய பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.