சென்னை, கோவைக்கு தினசரி சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்

தூத்துக்குடியில் இருந்து சென்னை, கோவைக்கு தினசரி சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-08-28 12:38 GMT

தெற்கு ரெயில்ேவ பொது மேலாளாருக்கு, தூத்துக்குடி பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரமநாயகம் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறிஇருப்பதாவது:-

தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு மீட்டர் கேஜ் பாதையில் 75 ஆண்டுகளாக நேரடி தினசரி ரெயில் இயக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு 2011 முதல் 2020 வரை தூத்துக்குடி-கோவை லிங்க் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. அதே போன்று தூத்துக்குடி-சென்னை இடையே பகல் நேர லிங்க் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டன. கொரோனா காலத்துக்கு பிறகு சென்னை, கோவை லிங்க் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ளது. கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டாலும், தூத்துக்குடி நகரத்துக்கு போதுமானதாக இல்லை.

ஆகையால் தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு இரவு நேர தினசரி சிறப்பு ரெயில், சென்னைக்கு பகல் நேர தினசரி சிறப்பு ரெயில் இயக்க வேண்டும். தூத்துக்குடி-சென்னை இடையே வாரம் 3 முறை இரவு நேர சிறப்பு ரெயில் இயக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து கேரளாவில் உள்ள நகரங்களுக்கு செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகள் அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். ஆகையால் நெல்லை-பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். மதுரை-லோக்மான்யா திலக் வாராந்திர ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்