ராமேசுவரத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-30 18:45 GMT

ராமேசுவரம், 

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ேகாடை விடுமுறை

பள்ளிக்கூட மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடுவதற்கு, கோவிலின் வடக்கு கோபுரவாசல் பகுதியில் இருந்து ரதவீதி சாலை வரையிலும் நீண்ட வரிசையில் நின்று தீர்த்தக்கிணறுகளில் புனித நீராடினர்.

3-ம் பிரகாரம் வரை

கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இலவச மற்றும் கட்டண தரிசன பாதையில், சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரம் வரையிலும் பக்தர்கள் குவிந்திருந்தனர்.

பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் கோவில் பணியாளர்களும், போலீசாரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதே போல் அம்பாள் சன்னதியிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கோவிலுக்கு வந்தவர்களின் வாகனங்களால், நேற்று லட்சுமண தீர்த்தம் சாலையில் இருந்து ராமதீர்த்தம், திட்டக்குடி சந்திப்பு சாலை, கோவிலின் மேற்கு வாசல் சாலை வரையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. ராமேசுவரம் கோவிலின் உப கோவிலான ராமர் பாதம், லட்சுமண தீர்த்தம், ராம தீர்த்தம் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.

தனுஷ்கோடி, பாம்பன்

இதே போல் தனுஷ்கோடி, பாம்பன் பாலம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்