புலி தாக்கி பசுமாடு சாவு
கோத்தகிரி அருகே புலி தாக்கி பசுமாடு உயிரிழந்தது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே புலி தாக்கி பசுமாடு உயிரிழந்தது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
புலி தாக்கியது
கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட கீழ் கோத்தகிரி அருகே உள்ள கரக்கோடு மட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப். விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலையில் தனக்கு சொந்தமான 2 பசுமாடுகளை அதே பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். ஆனால் மாலை வெகு நேரமாகியும் மேய்ச்சலுக்கு சென்றதில் ஒரு பசுமாடு கொட்டகைக்கு திரும்பவில்லை.
இதனால் அந்த தேயிலை தோட்டத்துக்கு சென்று ஜோசப் தேடி பார்த்தார். அப்போது அங்கு பலத்த காயங்களுடன் பசுமாடு இறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கீழ்கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த பசுமாட்டை பார்வையிட்டனர். மேலும் அங்கு புலியின் கால்தடங்கள் பதிவாகி இருந்தது. இதனால் புலி தாக்கி பசுமாடு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
கூண்டு வைத்து...
இதையடுத்து கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு, பசுமாட்டின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து அதே பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, எங்களது கிராமத்துக்கு போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் உள்பட அனைவரும் நடந்தே பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் புலி, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
எனவே கேமராக்கள் பொருத்தி அவற்றின் நடமாட்டத்தை கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவோ அல்லது கூண்டு வைத்து பிடிக்கவோ வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.