மரத்தில் கார் மோதி ஐகோர்ட்டு ஊழியர் மனைவியுடன் பலி

வானூர் அருகே மரத்தில் கார் மோதி ஐகோர்ட்டு ஊழியர் மற்றும் அவரது மனைவி பலியாகினர். இவர்களது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-08-12 18:45 GMT

வானூர்

கோவிலுக்கு சென்றவர்கள்

சென்னை மேற்கு மாம்பலம் சுப்பையா நகரை சேர்ந்தவர் ஸ்ரீவர்ஷன்(வயது 58). சென்னை ஐகோர்ட்டில் உதவி அலுவலராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி லலிதா (55). இவர்களது மகன் சிவராமகிருஷ்ணன்(23). இவர்கள் 3 பேரும் மயிலாடுதுறையில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் புறப்பட்டனர். காரை சிவராமகிருஷ்ணன் ஓட்டினார். சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வானூர் அருகே உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் கார் வந்தபோது சாலையின் குறுக்கே ஒருவர், திடீரென கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவர் மீது மோதாமல் இருக்க சிவராமகிருஷ்ணன் காரை திருப்பினார். இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

தம்பதி பலி

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கி 3 பேரும் படுகாயத்துடன் தவித்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீவர்ஷன், அவரது மனைவி லலிதா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். சிவராமகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்