தர்மபுரி: திருமணம் செய்து கொண்டு காதல் ஜோடி தற்கொலை
தர்மபுரி அருகே ரகசிய திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம், ஜிட்டாண்டஅள்ளி அருகேயுள்ள கொல்லப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகள் சினேகா இவர் பாலக்கோடு பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
ஜிட்டாண்டஅள்ளி அருகே உள்ள குளிக்காடு பகுதியை சேர்ந்த முருகன் மகன் தமிழரசு தர்மபுரியில் உள்ள ஐடிஐ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். பஸ்ஸில் பயணம் செய்யும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இந்நிலையில் கடந்த வாரம் சினேகாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவானது. இதையடுத்து கடந்த 7-ம் தேதியன்று பாலக்கோடு அருகே உள்ள முருகன் கோவிலில் இருவரும் சந்தித்து ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து நாங்கள் இருவரும் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம், என செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டு விஷம் குடித்துள்ளனர்.
செல்போனில் வந்த தகவலை பார்த்து விட்டு 2 பேரின் உறவினர்களும் அலறி அடித்து கொண்டு கோவிலில் சென்று பார்த்த போது 2 பேரும் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.
இருவரையும் உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சினேகா உயிரிழந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழரசும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேறு இடத்தில் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் காதலனுடன் விஷம் குடித்த கல்லூரி மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.