வங்கி ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

சோமரசம்பேட்டை அருகே வங்கி ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-08-08 19:21 GMT

சோமரசம்பேட்டை, ஆக.9-

சோமரசம்பேட்டை அருகே வங்கி ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வெடிகுண்டு வீச்சு

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை அடுத்த அதவத்தூர் பாலாஜி கார்டன் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரோஜா (வயது 50). இவருக்கு ராஜலட்சுமி, பவானி என்ற 2 மகள்களும், சிவக்குமார் என்ற மகனும் உள்ளனர். ராஜலட்சுமி தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

சரோஜாவின் கணவர் இறந்து விட்டார். இவரது வீடு காட்டுப்பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று இவரது வீட்டுக்குள் மர்ம ஆசாமிகள் 3 பேர் நாட்டுவெடிகுண்டு வீசினர். அந்த வெடிகுண்டு வீட்டின் சுவற்றில் பட்டு விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வெடிகுண்டு வெடிக்காததால் வீட்டில் இருந்தவர்கள் தப்பினர்.

கொலை மிரட்டல்

இதனையடுத்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த சரோஜா மற்றும் அவரது மகள்கள், மகன் ஆகியோரை மர்ம ஆசாமிகள் தகாதவார்த்தையால் திட்டினர். பின்னர் அரிவாளை காட்டி கொலை செய்து விடுவோம் என கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து சரோஜா சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வெடிக்காத நாட்டு வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்க செய்தனர். இது தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். வெடிகுண்டு வீச்சுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்