ஆற்றங்கரை சாலையில் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்

கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-18 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

வலது கரை சாலை

சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் சோதனை சாவடி எதிர்புறத்திலிருந்து கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலை பிரிந்து சந்தப்படுகை, திட்டுப்படுகை, நாதல்படுகை, முதலைமேடு, அளக்குடி, மகேந்திரப்பள்ளி மற்றும் காட்டூர் வரை செல்கிறது. இந்த சாலை கொள்ளிடம் ஆற்றங்கரை தெரு பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

மேலும் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், இறந்தவர்களின் உடல்களை மயானத்துக்கு எடுத்துச்செல்லும் முக்கிய சாலை பகுதியாகவும் இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கொள்ளிடம் ரெயில் பாலம் அருகே இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யும் இடத்துக்கு செல்லும் வழியாகவும், இறந்தவர்களின் நினைவாக ஈம கிரியை மண்டபத்துக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் இந்த சாலை இருந்து வருகிறது.

மண்ணரிப்பு

இந்த சாலையில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு சாலையின் இரு புறங்களிலும் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை குறுகலாக உள்ளது. எனவே அந்த இடத்தில் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ள இந்த சாலையில் இரு புறங்களிலும் மண்ணரிப்பு ஏற்பட்டு உடைப்பும் ஏற்பட்டு சாலை மிகவும் குறுகி காணப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை வாகனத்தில் கொண்டு செல்லும்போது சிரமம் ஏற்படுகிறது.

கான்கிரீட் தடுப்புச்சுவர்

மேலும் கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் உள்ளது. மயானத்துக்கு செல்லும் முக்கிய சாலையாக இருந்து வருவதுடன் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் கொள்ளிடம் ஆற்றங்கரை வலதுகரை சாலை உள்ளது. இருந்தும் கடந்த பத்து வருடங்களாக இந்த சாலையை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாலையில் உடைப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குறிப்பிட்ட அந்த சாலையில் இரு புறங்களிலும் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைத்தால் மழைக்காலத்திலும் உடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். போக்குவரத்துக்கு எந்த தடையும் இருக்காது. எனவே அப்பகுதி கிராம மக்களின் நலன் கருதி, மேற்கண்ட இடத்தில் சாலையின் இரு புறங்களிலும் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்