ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு சமுதாயக்கூடம் கட்ட வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்து மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்து மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமுதாயக்கூடம்
ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நடந்தது. ஊராட்சிகளின் உதவி இயக்குனர் குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும், தொகுதிக்கு ஒன்று வீதம், பெரிய அளவிலான சமுதாயக்கூடம் அமைக்க உள்ளாட்சித் துறை அமைச்சர் சிறப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கி தரவும், அதற்கான நிதியினை பெறுவதற்கான வழிமுறைகள் மாவட்ட கலெக்டர் மூலம் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோன்று நெமிலி ஊராட்சி ஒன்றியம் எலத்தூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், சயனபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளுக்கு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
நிலம் வழங்க வேண்டும்
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் களத்தூர் கிராமத்தின் நடுவே செல்லும் ஏரி கால்வாயில் சிறிய பாலம் அமைக்க வேண்டும், ஓச்சேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை சீர் செய்யும் பணி ஆண்டு கணக்கில் நடைபெற்று வருகிறது. இங்கு பஸ் நிலையம் இல்லாமல் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நெடுஞ்சாலையின் இருபுறமும் பஸ் நிலையம் அமைக்க வேண்டும், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் வேடல் பஸ் நிலையத்திலிருந்து கைனூர் செல்லும் வழியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் சின்னக்குக்குண்டி கிராமத்தில் ரேஷன் கடை அமைத்தல், பெல் நிறுவனத்திற்கு, வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள லாலாபேட்டை, முகுந்தராயபுரம், சீக்கராஜபுரம், நரசிங்கபுரம் ஆகிய ஊராட்சிகளில் இருந்து 1000 ஏக்கர் நிலம் தமிழக அரசால் கையகப்படுத்த பட்டது. இந்த நிலங்களுக்குள், அரசு புறம்போக்கு நிலம் இருப்பதால், இந்த 4 ஊராட்சிகளிலும் அரசு கட்டிடம், விளையாட்டு மைதானம் செயல்படுத்த இடம் இல்லை. எனவே பெல் நிறுவனம் மூலம் ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா 10 ஏக்கர் நிலம் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.