ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் விரைவில் விசாரணை
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
ரத்த மாதிரி பரிசோதனை
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி முதல் தற்போது வரை இந்த விவகாரம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்த வழக்கை முதலில் வெள்ளனூர் போலீசார் விசாரித்து வந்த நிலையில், தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேங்கைவயல், இறையூர் உள்பட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 147 பேரிடம் இதுவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்துள்ளனர். மேலும் இவர்களில் 119 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். முதல்கட்டமாக 11 பேருக்கு அனுமதி கிடைத்த நிலையில் 3 பேருக்கு மட்டும் ரத்த மாதிரி பரிசோதனை, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் 8 பேர் ரத்த மாதிரி பரிசோதனைக்கு வரவில்லை.
ஒரு நபர் ஆணையம்
இந்த நிலையில் அடுத்தகட்டமாக மேலும் 10 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை நடத்த கோர்ட்டு மூலம் போலீசார் அனுமதி பெற்றுள்ளனர். இதற்கிடையில் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த ஆணையம் தனது விசாரணையை விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.இதற்காக வேங்கைவயலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் வருகை தர உள்ளார். இங்கு சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியை பார்வையிட உள்ளார். மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை நடத்துவார். அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி அவர் வேங்கைவயல் வரலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு பிரத்யேகமாக ஒரு அறை வசதி ஏற்படுத்தப்பட்டு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவார்.
முடிவுக்கு வருமா?
வேங்கைவயல் வழக்கு விசாரணை ஒரு புறம் நடைபெற, ஒரு நபர் ஆணையம் விசாரணை மற்றொரு புறம் நடைபெற்றால் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு ஏற்படுமா? என அனைவரிடமும் ஒருவித எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசும் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.