பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்தியது நகைச்சுவை கூட்டம்

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்தியது நகைச்சுவை கூட்டம் என்று கோவையில் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

Update: 2023-06-26 20:45 GMT

மேட்டுப்பாளையம்

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்தியது நகைச்சுவை கூட்டம் என்று கோவையில் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

சாமி தரிசனம்

பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சிறப்புகளை எடுத்துக்கூறும் வகையில் அன்னூர், அவினாசி, குன்னூரில் பா.ஜனதா கட்சி சார்பில் சாதனை விளக்க பிரசாரம் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் அன்னூரில் நடைபெறும் பிரசாரத்தில் கலந்து கொள்ள நேற்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் வந்தார். முன்னதாக மேட்டுப்பாளையத்துக்கு வந்த அவர், அங்குள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

அமைச்சரை நீக்க வேண்டும்

பிரதமர் மோடியின் ஆட்சி ஏழை மக்களுக்கான ஆட்சி. கடந்த ஆண்டு மட்டும் 22 கோடி வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அனைத்து மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம், ஒரு நகைச்சுவை கூட்டம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்று 3-வது முறையாக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார். இது மக்களால் உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை தார்மீக அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் அன்னூருக்கு புறப்பட்டு சென்றார்.

சாதனை விளக்க பிரசாரம்

தொடர்ந்து அன்னூர் புதுப்பாளையம் காலனியில் கட்சி தொண்டர்களை சந்தித்து பேசியதுடன், மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பிரசாரத்தை அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசு விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் ஏராளமான விவசாயிகள் பலன் அடைந்து உள்ளனர். இதுதவிர வீடு இல்லாத மக்களை கருத்தில் கொண்டு வீடு கட்டுவதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கருத்து சுதந்திரம்

பின்னர் அன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ரூ.9½ லட்சத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பட்டக்காரன்புதூர் கிராமத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் பா.ஜனதா நிர்வாகிகள் கைது செய்யப்படுவது குறித்து கேட்கிறீர்கள், இதன்மூலம் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவது தெளிவாகிறது. இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு பா.ஜனதா நிர்வாகிகள் அச்சப்பட மாட்டார்கள். இன்னும் ஊக்கத்துடன் சமூக வலைதளங்களில் செயல்படுவார்கள். கோவில்களில் யார் வேண்டும் என்றாலும் வழிபடலாம். ஆனால் அந்த கோவிலுக்குரிய ஆகமத்தை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்