ஏரியில் போட்டி போட்டு நீந்திய கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி சாவு

ஏரியில் நண்பர்களுடன் போட்டி போட்டு நீந்தியபோது கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-09-02 18:46 GMT

பேரணாம்பட்டு,

ஏரியில் நண்பர்களுடன் போட்டி போட்டு நீந்தியபோது கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

கல்லூரி மாணவர்

பேரணாம்பட்டை அடுத்த சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் அஜித் (வயது 19), ஆம்பூரிலுள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார்.

நேற்று காலை 11 மணியளவில் அஜித், தனது தம்பி லோகேஷ் (15), மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த நண்பர்களான சாம் (18), விக்கி (17), பிரசாந்த் (18), யுவராஜ் (17), சூரியா (17), வேலு (17) ஆகிேயாருடன் அருகிலுள்ள ரெட்டி மாங்குப்பம் பெரிய ஏரிக்கு குளிக்க சென்றார்.

அனைவரும் ஏரியில் மகிழ்ச்சியாக குளித்து முடிந்த பின்னர் ஏரியின் கரை பகுதியிலிருந்து மறுகரைக்கு நீச்சலடித்து நீந்தி செல்வதில் யார் முதலிடம் பிடிப்பது என போட்டி வைத்தனர். அதன்படி அனைவரும் ஏரியின் மறுகரைக்கு போட்டி போட்டுக்கொண்டு நீச்சலடித்தவாறு சென்றனர்.

அப்போது அஜித், திடீரென ஏரியின் நடுவில் இருந்த சுமார் 20 அடி ஆழமான பகுதியில் சிக்கி மூச்சு திணறி தத்தளித்தார்.

கூச்சல்

தன்னை காப்பாற்றும்படி நண்பர்களை பார்த்து கூச்சலிட்டவாறு தண்ணீரில் தத்தளித்தார். ஆனால் நண்பர்கள் காப்பாற்றுவதற்குள் அவர்கள் கண் எதிரே ஆழமான பகுதியில் சகதியில் மூழ்கினார்.

உடனே அவரது தம்பி லோகேஷ் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியடைந்து நீந்தாமல் பாதியில் புறப்பட்ட கரைக்கே திரும்பிச்சென்று அஜித்தை காப்பாற்றும்படி கத்தி கூச்சலிட்டவாறு கிராம மக்களை உதவிக்கு அழைத்தனர்.

கிராம மக்கள் போராடியும் மீட்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. தகவலறிந்த மேல்பட்டி போலீசார் ஆம்பூர் தீயணைப்பு மீட்பு படையினர் அங்கு சென்று அஜித்தை தண்ணீருக்குள் தேடினர்.

உடல் மீட்பு

இந்த நிலையில் மாலை 5.15 மணியளவில் அஜித்தின் உடலை அவர்கள் மீட்டனர். இது குறித்து மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக மேல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித் பலியான சம்பவத்தால் சங்கராபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Tags:    

மேலும் செய்திகள்