தென்னை சார்ந்த தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்

பேராவூரணி பகுதியில் தென்னை சார்ந்த தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2023-04-16 19:32 GMT

பேராவூரணி:

பேராவூரணி பகுதியில் தென்னை சார்ந்த தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

விவசாயிகள் சந்திப்பு கூட்டம்

பேராவூரணியில் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் உறுப்பினர்கள் சந்திப்பு மற்றும் தென்னை விவசாயிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் காந்தி தலைமை தாங்கினார். செயலாளர் ராம்குமார் வரவேற்றார். கவுரவத் தலைவர் வேலுசாமி, துணைத்தலைவர் கோவிந்தசாமி, பொருளாளர் பன்னீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அசோக்குமார் எம்.எல்.ஏ., நாம் உழவர் இயக்கத் தலைவர் பிரபு ராஜா, மதுரை வேளாண் கல்லூரி முன்னாள் முதல்வர் வைரவன், தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில செயலாளர் அறந்தாங்கிசெல்லதுரை, வடகாடு மிளகு அறிமுக விவசாயி பாலுச்சாமி, கீரமங்கலம் நக்கீரர் தென்னை மைய நிறுவன காமராசு, திருச்சி வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் இலக்குவன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

புவிசார் குறியீடு

பொதுமக்கள் அனைவரும் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த முன்வர வேண்டும். பேராவூரணி பகுதி தென்னைக்கு தமிழ்நாடு அரசு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தும், புவிசார் குறியீடு பெற உரிய ஆதாரங்களை திரட்டி தருவது எனவும், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் பரீட்சார்த்த அடிப்படையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்று அறிவித்ததை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சத்துணவு திட்டத்தில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். ஆவின் நிறுவனம் போன்று, தென்னை உற்பத்திக்கு பொது இடங்களில் விற்பனை நிலையம் அமைத்து, இளநீர், நீரா, தேங்காய்ப்பால், தேங்காய் பவுடர், தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிபேட்டை அமைக்க வேண்டும்

தென்னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையும், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் வேளாண் அறிவியல் பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.

தென்னை அதிகம் விளையும் பகுதியான பேராவூரணி கிழக்கு கடற்கரை பகுதியில் தென்னை சார்ந்த தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை செயற்குழு உறுப்பினர் நாகராஜன் ஒருங்கிணைத்தார்.முடிவில் இணைச் செயலாளர் முகமது சமீர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்