பணம் கொடுக்க மறுத்த முந்திரி எந்திர விற்பனையாளருக்கு கொலை மிரட்டல்

பிரம்மதேசம் அருகே பணம் கொடுக்க மறுத்த முந்திரி எந்திர விற்பனையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-14 19:15 GMT

பிரம்மதேசம்:

சென்னை சைதாப்பேட்டை சாரதாம்பாள் தெருவை சேர்ந்தவர் பாரதி(வயது 50). இவர், முந்திரி உடைக்கும் எந்திரம், முந்திரியை பதப்படுத்தும் எந்திரம் உள்ளிட்ட எந்திரங்களை விற்பனை செய்து வருகிறார். மேலும் நேரடியாக சென்று முந்திரி தொழிலில் பயன்படுத்தப்படும் எந்திரங்களை பழுது நீக்கியும் வருகிறார்.

இவரது சொந்த ஊர், பிரம்மதேசம் அடுத்த மழவந்தாங்கல் கிராமம் ஆகும். எனவே பிரம்மதேசத்தில் முந்திரி உடைக்கும் எந்திரங்களை விற்பனை செய்யும் வகையில் கடையும், நிதி நிறுவனம் நடத்தவும் முடிவு செய்தார். அதன்படி புதிய கட்டிடத்தை கட்டி வருகிறார்.

கொலை மிரட்டல்

இந்த நிலையில் பிரம்மதேசத்தில் கட்டிட பணிகளை பார்வையிட்ட பாரதி, மழவந்தாங்கல் கிராமத்துக்கு புறப்பட்டார். அப்போது அரியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த அமாவாசன் மகன்கள் சதீஷ்பாபு, பாலாஜி, முனுசாமி மகன் ராமு, மணிகண்டன் ஆகியோர் பாரதியை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்தனர். பணம் கொடுக்க மறுத்த அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

மேலும் அவரது வீட்டுக்கு சென்ற 4 பேரும் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பாரதி கொடுத்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்பாபு, பாலாஜி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராமு, மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்