உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி மிரட்டிய ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்கு

உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி மிரட்டிய ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்கு

Update: 2023-03-17 18:45 GMT

கொரடாச்சேரி அருகே ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி மிரட்டிய ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்ற தலைவர்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் சரகம் களத்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி விஜயகுமாரி. இவர் களத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவர்கள் பல ஆண்டுகளாக களத்தூரில் பாண்டவயாற்று கரையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

இவரது வீட்டிற்கு அருகில் மற்ற சிலரும் வீடு கட்டி குடியிருந்து வந்தனர். அந்த இடம் ஆற்றின் கரையாக இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு இதற்கான நஷ்ட ஈடும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சுப்பிரமணி மட்டும் வீட்டை காலி செய்ய மறுத்துள்ளார்.

மண்எண்ணெய்யை ஊற்றி மிரட்டல்

நேற்று பொதுப்பணித்துறை என்ஜினீயர் தங்கமுத்து தலைமையில் ஊழியர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றுள்ளனர். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் தலைமையில் கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆக்கிரப்பு அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி, வீட்டிலிருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து வந்து உடலில் ஊற்றி மிரட்டி உள்ளார்.

வழக்கு

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், பொதுப்பணித்துறை ஊழியர்களும் மண்எண்ணெய் பாட்டிலை விஜயகுமாரியிடம் இருந்து பறித்து அவரை தடுத்தனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி உள்ளிட்ட 7 பேர் மீது கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்