போலி சான்றிதழ் கொடுத்து வக்கீலாக பணிபுரிந்த வாலிபர் மீது வழக்கு

திருக்கோவிலூரில் பரபரப்பு போலி சான்றிதழ் கொடுத்து வக்கீலாக பணிபுரிந்த வாலிபர் மீது வழக்கு பல்வேறு நபர்களிடம் மோசடி செய்ததும் அம்பலம்

Update: 2022-11-20 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள ஜி.அரியூர் கிராமத்தை சேர்ந்தவர் அரசன் மகன் வீரன்(வயது 35). திருக்கோவிலூர் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்த இவரது நடத்தையில் சக வக்கீல்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வக்கீல் சங்க துணை தலைவர் ராஜ்குமார் வீரனிடம் அவரது வக்கீல் படிப்பு முடித்ததற்கான சான்றிதழை தருமாறு கேட்டார். ஆனால் அவரோ இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று ஏதாவது ஒரு காரணத்தை கூறி காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வக்கீல் சங்க துணை தலைவர் ராஜ்குமார் திருக்கோவிலூர் வக்கீல் சங்கத்தில் வீரனின் வக்கீல் படிப்பு குறித்த சான்றிதழை ஆய்வுசெய்தபோது அது போலியானது என்பது தொியவந்தது. புதுக்கோட்டையை சேர்ந்த வக்கீல் ஒருவரின் சான்றிதழை திருத்தி தனது பெயருக்கு மாற்றி அந்த சான்றிதழ்களை வக்கீல் சங்கத்தில் பதிவு செய்ததும், வக்கீல் என்ற பெயரில் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், நீதிமன்றம் மற்றும் சங்க வக்கீல்கள் என பலபேரை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்து பண பலன்களை அடைந்ததும் தெரியவந்தது.

எனவே வீரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருக்கோவிலூர் வக்கீல் சங்க செயலாளர் சுவிஜி.சரவண்ணகுமார் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வீரனை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்