2-வது திருமணத்துக்கு பெண் தேடிய தொழில் அதிபர் மீது வழக்கு

கோவையில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய பெண் தேடிய தொழில் அதிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2023-06-22 19:45 GMT

போத்தனூர்

கோவையில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய பெண் தேடிய தொழில் அதிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆதிரா (வயது 28). இவர் கோவை மாநகர தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

தொழில் அதிபர்

எனக்கும், கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தொழில் அதிபரான அர்ஜூன் அய்யப்பன் (வயது 32) என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி திருமணம் நடந்தது.

எனது கணவர் தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக எனது பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வரச்சொன்னார்.

அதன்படி நான் எனது பெற்றோரிடம் இருந்து ரூ.56 லட்சம் வாங்கி கொடுத்தேன்.

பின்னர் கார் வேண்டும் என்று கூறினார். உடனே நானும் எனது பெற்றோரிடம் பேசி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசுகார் ஒன்றையும் வாங்கி கொடுத்தேன்.

2-வது திருமணம் செய்ய முயற்சி

எனது கணவர் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ளார். நான் கோவையில் தங்கி இருந்து எனது தந்தையுடன் சேர்ந்து தொழில் செய்து வருகிறேன்.

இந்த நிலையில் எனது கணவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், 2-வது திருமணம் செய்ய பெண் வேண்டும் என்றும் திருமண தகவல் மையத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெண் தேடி வருகிறார்.

இது பற்றி நான், பாலக்காடு சென்று எனது கணவரிடம் கேட்டேன்.

அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே எனது கணவருக்கு, வாங்கிக்கொடுத்த சொகுசு காரை எடுத்துக்கொண்டு கோவை வந்து விட்டேன்.

3 பேர் மீது வழக்கு

எனவே என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்ய பெண் தேடி வரும் எனது கணவர் மீதும், இதற்கு உடந்தையாக இருக்கும் அவருடைய தந்தை அய்யப்பன், தாய் விஜயா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அதன்பேரில் அர்ஜூன் அய்யப்பன், அவரது தந்தை அய்யப்பன், தாய் விஜயா ஆகிய 3 பேர் மீதும் மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்