சிறுமியை தாயாக்கிய டிரைவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு

திருமணம் செய்து கொள்வதாகக்கூறி சிறுமியை தாயாக்கிய டிரைவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Update: 2023-09-21 17:42 GMT

சிறுமி கர்ப்பம்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார். ஆனால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டில் உள்ளவர்களிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் மாணவியை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து மாணவியிடம் விசாரித்த போது அதேப் பகுதியை சேர்ந்த டிரைவர் முருகன் என்பவர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக தெரிவித்துள்ளார்.

குழந்தை பிறந்தது

இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி ஸ்ரீபெரும்பதூர் அரசு மருத்துவனையில் சிறுமிக்கு ஏழு மாதத்திலேயே குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது. இதனால் குழந்தையை மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த குழந்தை நேற்று உயிரிழந்தது.

அதைத்தொடர்ந்து பிரதே பரிசோதனைக்காக குழந்தையின் உடலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போக்சோ சட்டத்தில் வழக்கு

சிறுமியின் தந்தை கடந்த 3-ந் தேதி அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகளை திருமணம் செய்வதாக ஏமாற்றி கர்ப்பமாகிய முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலை மறைவான முருகனை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்