காவிரி ஆற்றில் மணல் திருடிய கான்கிரீட் கலவை தயார் செய்யும் நிறுவனம் மீது வழக்குப்பதிவு

நொய்யல் அருகே காவிரி ஆற்றில் மணல் திருடிய கான்கிரீட் கலவை தயார் செய்யும் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-11-07 19:07 GMT

ஆற்றில் மணல் திருட்டு

கரூர் மாவட்டம் நஞ்சை தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றங்கரையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கான்கிரீட் கலவைகள் தயார் செய்து விற்பனை செய்து வரும் கிறிஸ்ஷி ரெடிமிக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மூலம் அங்கு தயார் செய்யப்படும் கான்கிரீட் கலவைகள் ஆர்டரின்பேரில் லாரிகள் மூலம் கரூர், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், பல்வேறு கட்டிடங்களுக்கு தடுப்புச்சுவர் கட்டுவதற்கும் கான்கிரீட் கலவைகள் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றின் அருகே கான்கிரீட் கலவை தயார் செய்யும் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான காவிரி ஆற்று மணலை அரசு அனுமதி இன்றி திருட்டுத்தனமாக கான்கிரீட் கலவை தயார் செய்யும் நிறுவனத்தின் வளாகத்திற்குள் அள்ளி வைத்து மறைத்து வைத்திருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் புகழூர் வருவாய் அலுவலர் சுமதிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

வழக்குப்பதிவு

தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு, இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, அரசுக்கு சொந்தமான காவிரி ஆற்று மணலை அரசு அனுமதியின்றி சுமார் 12 யூனிட் மணலை திருட்டுத்தனமாக கிருஸ்ஷி ரெடிமிக்ஸ் கான்கிரீட் நிறுவனம் தனது கம்பெனியினுள் பதுக்கி வைத்திருந்திருந்ததாக அந்த நிறுவனத்தின் மேலாளர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா புங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவரது மகன் சண்முகம் (வயது 32) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்