ரெயில்கள் வந்தபோது திடீரென தண்டவாளத்தில் நின்ற சரக்கு வேன்

ரெயில்கள் வந்தபோது திடீரென தண்டவாளத்தில் நின்ற சரக்கு வேனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-18 21:27 GMT

மணப்பாறை:

தண்டவாளத்தில் நின்றது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ரெயில் நிலையம் அருகே ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. நேற்று மாலை மதுரையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் தேஜஸ் ரெயிலும், எதிரே மற்றொரு தண்டவாளத்தில் சரக்கு ரெயிலும் அந்த வழியாக வரும் நேரத்தில், ரெயில்வே கேட்டை அடைக்கும் பணியில் ஊழியர் ஈடுபட்டார். சற்று தொலைவில் ரெயில்கள் வந்த நிலையில், அந்த கேட்டை அவர் மூடினார்.

ஆனால் அதற்குள் அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று 2 கேட்டுகளுக்கும் நடுவில் வந்து, தண்டவாளத்தில் நின்றது. பின்னர் அந்த சரக்கு வேனை இயக்க முடியவில்லை. தேஜஸ் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் அந்த பகுதியை கடக்கும் நேரத்தில் சரக்கு வேன் தண்டவாளத்தில் நின்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது

இதையடுத்து ரெயில்வே ஊழியர் மூலம் அங்கு வந்த சரக்கு ரெயிலுக்கு 'சிக்னல்' கொடுக்கப்பட்டு, அந்த ரெயில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் உடனடியாக அங்கு மற்றொரு வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பொக்லைன் எந்திரத்தை எடுத்து வந்து தண்டவாளத்தில் நின்ற சரக்கு வேனை அப்புறப்படுத்தினர்.

இதனால் அந்த வழியாக வந்த தேஜஸ் ரெயில் தடையின்றி, அந்த பகுதியை கடந்து சென்றுவிட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் சரக்கு ரெயிலும் அந்த வழியாக புறப்பட்டு சென்றது. சரக்கு வேனை அப்புறப்படுத்தாமல் இருந்திருந்தால், அதன் மீது ரெயில் மோதியிருக்கும் என்று அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

அபராதம்

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ேமலும் ரெயில் வரும் நேரத்தில் சரக்கு வேனை தண்டவாளத்திற்கு ஓட்டி வந்ததற்காக அதன் டிரைவருக்கு அபராதம் விதித்தனர். இந்த சம்பவத்தில் உரிய நேரத்தில் சரக்கு வேன் அகற்றப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்