சாலையில் சரக்கு வேன் கவிழ்ந்துடிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்
வடமதுரை அருகே சாலையில் சரக்கு வேன் கவிழ்ந்து டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருச்சியை சேர்ந்தவர் ராஜா (வயது 25). இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை ராஜா தனது சரக்கு வேனில் பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் சுமைதூக்கும் தொழிலாளிகளான திருச்சி காட்டூரை சேர்ந்த சபீர்முகமது (20), திருவெறும்பூரை சேர்ந்த லோகநாதன் ஆகியோரும் வேனில் வந்தனர்.
வடமதுரை அருகே மூனாண்டிபட்டியில், திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அந்த வேன் சென்றபோது, திடீரென்று வேனின் பின்பக்க டயர் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் வந்த டிரைவர் ராஜா உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். வேனில் ஏற்றிவந்த 100 கோழிகள் செத்தன. இதையடுத்து விபத்தில் காயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே வேன் சாலையில் கவிழ்ந்ததால் திண்டுக்கல்-திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் கவிழ்ந்த வேன் மற்றும் இறந்த கோழிகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரிசெய்தனர். அதன்பிறகு போக்குவரத்து தொடங்கியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.