கடலூரில் மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த கார்; பெண் படுகாயம்

கடலூரில் மின்கம்பத்தில் மோதி கார் கவிழ்ந்ததில் பெண் படுகாயமடைந்தார்.

Update: 2023-02-18 18:45 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஜோதி நகரை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி அம்சா (வயது 45). இவர் அதே பகுதியை சேர்ந்த 6 பேருடன் ஒரு காரில் கடலூர் வழியாக திருநள்ளாருக்கு புறப்பட்டார். இந்த கார் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டயர் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த உயர் அழுத்த மின்கம்பத்தில் மோதி, தலைகுப்புற கவிழ்ந்தது. மின்கம்பம் உடைந்து, மின்ஒயர்களும் அறுந்து விழுந்ததால், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இந்த விபத்தில் அம்சா படுகாயமடைந்தார். மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக தப்பினர். விபத்து பற்றி தகவல் அறிந்த புதுநகர் போலீசார், அம்சாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து மாற்று மின்கம்பத்தை நட்டு சரிசெய்தனர். இந்த விபத்தால் கடலூர்-புதுச்சேரி சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்