தொழிற்சாலை மின் இணைப்பு துண்டிப்பு

வாணியம்பாடியில் கழிவுநீரை நிலத்தில் விட்ட தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Update: 2023-07-16 18:04 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை வாணியம்பாடியில் உள்ள மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தின் எதிரில் உள்ளது. இதனை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தொழிற்சாலையில் தோல் கழிவு நீரை பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி சுத்திகரிப்பு செய்யாமல் தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள நிலத்தில் வெளியேற்றி தேக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் தொழிற்சாலையில் அபாயகரமான பொருட்களை கையாளுவதற்கான உரிமம் பெறப்படவில்லை என்பதும் விசாரணை தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகம் பிறப்பித்த உத்தரவின் பேரில் தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலையை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இது போன்ற சம்பவத்தில் ஈடுபடும் தோல் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் மாவட்ட பொறியாளர் கோபாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்