ஏற்காடு மலைப்பாதையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Update: 2023-04-16 19:40 GMT

ஏற்காடு:-

ஏற்காடு மலைப்பாதையில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கட்டிட என்ஜினீயர்

நாமக்கல் மாவட்டம் செறிஞ்சி பாளையத்தை சேர்ந்த குமரேசன் மகன் கபினேஷ் (வயது21), கட்டிட என்ஜினீயர். இவர், தன்னுடைய தாய் லதா, தங்கை மற்றும் 2 குழந்தைகளுடன் நேற்று ஏற்காட்டுக்கு தன்னுடைய காரில் வந்தார். கார் மதியம் 2 மணி அளவில் ஏற்காடு மலைப்பாதையில் 3-வது கொண்டை ஊசி வளைவு அருகில் வந்த போது அதிகப்படியான புகையை வெளியேற்றியது.

உடனே கபினேஷ், காரை விட்டு இறங்கி பார்த்த போது திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. காரில் இருந்தவர்கள் அவசரமாக இறங்கினர். அதில் இருந்த பொருட்களும் வெளியே எடுக்கப்பட்டன.

முழுவதும் எரிந்தது

இதற்கிடையே காரில் பற்றி எரிய தொடங்கிய கார், முழுவதும் எரிந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து உருக்குலைந்தது.

இந்த சம்பவத்தால் மலைப்பாதையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்