திருப்பரங்குன்றம் அருகே பெட்ரோல் பங்கில் கார் தீப்பிடித்ததால் பரபரப்பு

திருப்பரங்குன்றம் அருகே பெட்ரோல் பங்கில் கார் தீப்பிடித்தது.

Update: 2023-07-02 20:36 GMT

திருப்பரங்குன்றம்,

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள பேரையூரை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் செல்வராஜ்(வயது 41), மீன் வியாபாரி. இவர் வழக்கம்போல வியாபாரம் செய்வதற்காக நேற்று அதிகாலையில் பேரையூரில் இருந்து மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலை மெயின்ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தி காருக்கு கியாஸ் நிரப்பினார். பின்னர் அவர் காரை ஓட்டி புறப்பட தயாரானதாக தெரிகிறது. ஆனால் கார் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் செல்வராஜ் தனது ஆம்னி காரை திரும்ப, திரும்ப ஓட்டுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனாலும் ஓட்ட முடியவில்லை. இந்த நிலையில் திடீரென்று கார் தீப்பற்றி மள, மளவென எரிந்தது. இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதுதொடர்பாக தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயைஅணைக்க போராடினர். ஆனால் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. பெட்ரோல் பங்க் அருகிலேயே கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீ பரவிய நேரத்தில் பெட்ரோல், டீசல் போடுவதற்காக வாகனங்கள் அடுத்தடுத்து வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்