ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோவையை சேர்ந்தவர் வேட்புமனு தாக்கல்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோவையை சேர்ந்தவர் வேட்புமனு தாக்கல்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோவையை சேர்ந்தவர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
நாட்டின் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் உள்ளார். இவருடைய பதவிக்காலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் (வியாழக்கிழமை), வேட்புமனுக்களை திரும்பப்பெற வருகிற 2-ந் தேதியும் கடைசி நாள் ஆகும். இதற்கிடையே பா.ஜனதா கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் மூத்த தலைவர் யஸ்வந்த் சின்கா ஆகியோரும் அறிவிக்கப்பட்டு தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்.
கோவையை சேர்ந்தவர் வேட்புமனு தாக்கல்
இந்த நிலையில் கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த 38 தேர்தல்களில் போட்டியிட்ட தேர்தல் மன்னனான நூர்முகமது (வயது 64) என்பவர் திடீரென்று நேற்று முன்தினம் டெல்லி சென்றார். பின்னர் நாடாளுமன்றத்துக்கு சென்ற அவர், ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரியான பி.சி.மோடியை சந்தித்து தானும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் கோவை திரும்பினார்.
இது குறித்து நூர்முகமது கூறியதாவது:-
ஜனாதிபதிதான் இந்த நாட்டின் முதல் குடிமகன். ஓட்டுரிமை பெற்ற யாரும் இந்த தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் அதை வழிமொழிய எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அப்படி இருந்தால்தான் வேட்புமனு ஏற்கப்படும். இல்லை என்றால் தானாக வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.
எனக்கு எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை. இதனால் எனது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு விடும். இருந்தபோதிலும் ஓட்டுரிமை மிக மிக முக்கியம் என்பதை வலியுறுத்துவதற்காகதான் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தேன். தேர்தலில் ஓட்டுப்போட விடுமுறை கொடுத்து, பல்வேறு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பலர் ஓட்டுப்போடுவது இல்லை.
எனவே தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றாதவர்களின் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
38 முறை போட்டி
பழைய கார்களை விற்பனை செய்யும் வேலை செய்து வரும் நூர்முகமது, நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி என்று இதுவரை 38 முறை தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். தற்போது முதன் முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார். அவருக்கு ஒரு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
நூர்முகமது கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி 94-வது வார்ட்டில் போட்டியிட்டு மன்னர் வேடம் அணிந்து பொதுமக்களை சந்தித்து அவர் வாக்குகள் சேகரித்தது குறிப்பிடத்தக்கது.