நாற்கர சாலை தடுப்புச்சுவற்றில் கார் மோதி தொழில் அதிபர் பலி

கயத்தாறு அருகே நாற்கர சாலை தடுப்புச்சுவற்றில் கார் மோதி தொழில் அதிபர் பலியானார்.

Update: 2023-02-15 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே நாற்கர சாலை தடுப்புச்சுவற்றில் கார் மோதி தொழில் அதிபர் பலியானார்.

தொழில் அதிபர்

தென்காசி மாவட்டம் கொட்டாக்குளத்தை சேர்ந்தவர் ஆனந்த் மகன் விஜய் ஆனந்த் (வயது 41). தொழில் அதிபர். இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவியும், இரண்டு 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வசித்து வந்த விஜய் ஆனந்த் தற்போது ஊருக்கு வந்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை அவர் ஊருக்கு புறப்பட்டார். தனது உறவினரான சென்னை மயிலாப்பூர் ராக்கியப்பான் தெருவைச் சேர்ந்த பூதலிங்கம் என்பவரின் மகன் விக்னேஷ் (47) என்பவருடன் காரில் நெல்லை பாப்பான்குளத்தில் உள்ள ஒரு கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு பெங்களூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். காரை விக்னேஷ் என்பவர் ஓட்டிச் சென்றார்.

தடுப்புச்சுவற்றில் கார் மோதியது

கயத்தாறு நாற்கர சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது கார் திடீரென நிலைதடுமாறி தடுப்புச்சுவற்றில் மோதியது. இதனால் கார் அப்பளம் போல் நொறுங்கியதில் விஜய் ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேஷ் பலத்த காயம் அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். விஜய் ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த விக்னேசையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்