காட்சி பொருளாக உள்ள பஸ் நிறுத்தம்

கொள்ளிடம் அருகே அரசூரில் காட்சி பொருளாக பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி இயக்க வேண்டும் என மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-25 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே அரசூரில் காட்சி பொருளாக பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி இயக்க வேண்டும் என மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

அரசூர் பஸ் நிறுத்தம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசூரில் புதிய பஸ் நிறுத்த கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 2 மாதங்கள் முன்பு திறக்கப்பட்டது. ஆனால் அந்த பஸ் நிறுத்தத்தில் எந்த பஸ்சும் நிற்காமல் சென்று கொண்டு இருக்கிறது. அரசு போக்குவரத்து கழக டவுன் பஸ்சும் நிற்காமல் செல்கின்றன. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மணலகரம், காப்பியக்குடி, பட்டவிளாகம், ஓலையம்புத்தூர், தில்லைவிடங்கன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சீர்காழி, கொள்ளிடம் ,புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நிற்காமல் செல்லும் பஸ்கள்

அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தொழிலாளர்கள் உள்ளிட்டோரும் உரிய நேரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று சேர முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:-

அரசூர் கிராமத்தில் பழைய பஸ் நிறுத்தம் இருந்த இடத்தில் உள்ள பஸ் நிழற்குடையை அகற்றிவிட்டு அப்பகுதியில் மயிலாடுதுறை எம்.பி. நிதியின் கீழ் புதிய பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு எந்த பயன்பாடும் இல்லாமல் காட்சி பொருளாகவே விளங்கி வருகிறது.

மேலும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக புதிதாக பஸ் நிறுத்த கட்டிடம் அரசின் சார்பில் கட்டிக் கொடுத்தும், அங்கு எந்த பஸ்சும் நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது. இதனால் அங்கு வந்து காத்திருப்பவர்கள் ஏமாற்றத்துடன் செல்கிறார்கள்.

எனவே மாணவ- மாணவிகள் அதிக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே அப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலன் கருதி புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களையும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்