ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கட்டிடம் கட்ட வேண்டும்

வெங்கடேசபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கட்டிடம் கட்ட வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் மனு கொடுத்துள்ளனர்.

Update: 2023-10-23 06:45 GMT

வாணியம்பாடியை அடுத்த வெங்கடேசபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் பத்மாவதி சீனிவாசன், தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.விடம் நேரில் மனு அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாப்பட்டு ஊராட்சி, வெங்கடேசபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 18 மாணவர்கள், 23 மாணவிகள் என மொத்தம் 41 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருந்ததால் கடந்த மே மாதம் கட்டிடம் இடிக்கப்பட்டது.

இதனால் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களால் கட்டப்பட்டு, தளவாட பொருட்கள் போட்டு வைத்திருந்த அறையில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும், பள்ளி மைதானத்தில் 1, 2, 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி மைதானத்திலும் பாடம் நடத்தி வருகிறோம்.

மழைக்காலங்களில் மாணவ- மாணவிகளை ஒரே வகுப்பறையில் அமர வைப்பதால் கற்பித்தல் பணி மிகவும் பாதிப்படுகிறது. இதுபற்றி கிராம சபை கூட்டத்தில் கடிதம் கொடுத்துள்ளோம். பள்ளிக்கு கட்டிடம் இல்லாததால், சில பெற்றோர்கள் இந்த வருடம் தனியார் பள்ளியில் மாணவர்களை சேர்த்து விட்டார்கள். எனவே எங்களுக்கு உடனடியாக பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. பள்ளிக்கு கட்டிடம் கட்டித்தர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்