நடைபாதையின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும்

பந்தலூர் அருகே நடைபாதையின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-08-31 15:15 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே நடைபாதையின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தோட்ட தொழிலாளர்கள்

பந்தலூர் தாலுகா நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் (டேன்டீ) ரேஞ்ச் எண்.2 மாரியம்மன் கோவில் ஐந்து லைன்ஸ், ஒளிமடா வழியாக 3 லைன்ஸ் பகுதிக்கு நடைபாதை செல்கிறது. இந்த வழியாக உப்பட்டிக்கு செல்ல முடியும். இந்த நடைபாதை வழியாக பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அங்கன்வாடி செல்லும் குழந்தைகள் நடந்து சென்று வருகின்றனர்.

நடைபாதையை ஒட்டி நீரோடை செல்கிறது. அங்கு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நடைபாதை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் நடந்து செல்லும் போது தவறி நடைபாதை மற்றும் நீரோடைக்குள் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

புதிய பாலம்

மேலும் நடைபாதையின் குறுக்கே பாலம் இருந்தது. அந்த பாலம் உடைந்து, பழுதடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மாணவ-மாணவிகள், முதியவர்கள், குழந்தைகள் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். மழை காரணமாக சேறும், சகதியுமாக காணப்படுவதால், வழுக்கி நீரோடைக்குள் விழும் அபாயம் உள்ளது. இதனால் அசம்பாவிதம் ஏற்படும் நிலை இருக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கடந்த சில மாதங்களாக நடைபாதை பெயர்ந்தும், பாலம் உடைந்தும் காணப்படுகிறது. மேலும் பாதுகாப்பு கருதி நடைபாதையை ஒட்டி உள்ள நீரோடையில் தடுப்புச்சவர் கட்டவில்லை. இதனால் நாளுக்கு நாள் நடைபாதை பெயர்ந்து வருகின்றது. மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனை சீரமைக்க கோரி அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நிதி ஒதுக்கீடு செய்து நடைபாதையை சீரமைப்பதோடு, புதிய பாலம் கட்ட வேண்டும். மேலும் நீரோடையை ஒட்டி தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்